www.vsnmoto.com
Life More Fun
உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது.

இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன.

பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இவருக்கு இந்த சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரிட்டனில் மொத்தம் 1.5 கோடி பேர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில், பாதி பேருக்கு, தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.

நூற்றுக்கணக்கானோர், உயர் ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படாமல் தடுக்க, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையும் நிலவுகிறது. அத்தகையோருக்கு இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரிட்டன் டாக்டர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து, டாக்டர் மெல் லோபோ என்பவர் கூறுகையில்,

 “இது, உயர் ரத்த அழுத் தத்திற்கான சிகிச்சை முறையில், மிகச் சிறந்த வளர்ச்சி’ என்றார்.

Comments (0) | 14-Jan-10 10:40:52 AM

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது.

இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

Comments (0) | 14-Jan-10 10:34:37 AM
சில நினைவுகள் நம்மை வாட்டி வதைக்கும். பொதுவாக சோகமான சம்பவங்கள், பயம் போன்றவை அடிக்கடி நினைவுக்கு வந்து துன்புறுத்தும்.

மகிழ்ச்சியான சம்பவங்களை நாம் மீண்டும் நினைப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் மனதை வேதனைப்படுத்தும் நினைவுகள் மீண்டும் வந்தால் கலங்கி விடுகிறோம். வாழ்க்கையே பெரும் தொந்தரவாகிவிடுகிறது. அதையே நினைத்து மனநலம் பாதிக்கப்படுவோரும் இருக்கிறார்கள்.

இனி இதுபோன்ற தொந்தரவு தரும் எண்ணங்களைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. முளையில் பதிவாகி இருக்கும் அந்த எண்ணப்பதிவை கண்டுபிடித்து அழித்து விடும் விஞ்ஞானமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இது சிகிச்சைமுறையாகவும் வர இருக்கிறது.

அமெரிக்காவின் நியார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ள இந்த முறைக்கு பெயர் `பிகேவியர் தெரபி’ என்று பெயரிட்டு உள்ளனர்.
நமது எண்ணங்கள் எல்லாம் முளையில் உற்பத்தி ஆகின்றன. அங்கேயே பதிவு செய்யப்படுகின்றன. இதில் நம்மை துன்புறுத்தும் பயஉணர்வுகளும் பதிவாகி இருக்கும். அது தொடர்பான சம்பவங்கள், சூழல்கள் மீண்டும் அமையும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
இதுவரை பயம் (போபியா) தொடர்பான சிகிச்சைக்கு, சம்பந்தப்பட்டவர்களிடமே காரணம்கேட்டு அதுபோன்ற சூழல்வராமல் தடுப்பதன் முலமே பயஉணர்வை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சூழல் அமைந்துவிட்டால் நிச்சயம் பயம் மீண்டும் தோன்றிவிடும்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய முறையில் பயத்துக்கு உள்ளானவர்களின் முளைப்பதிவுகள் ஸ்கேன் செய்து பார்க்கப்படும். அப்போது வண்ணவண்ண கட்டங்களாக பதிவுகள் காட்டப்படும். அதில் நீலநிற கட்டமாக பதிவாகும் நினைவுகள் பய உணர்வை குறிக்கும்.
பயத்தை உருவாக்கும் சில சம்பவங்களை ஏற்படுத்தி அதற்கேற்ப பதிவுகள் வேறுபடுத்திக் காட்டும்படியாக இந்த முறை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு அந்த பயஉணர்வுகளை அழித்துவிட்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் வெற்றி கிடைத்து உள்ளது. அதாவது தேவையற்ற எண்ணங்களை அழிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

முதலில் எலிகளுக்கும், பிறகு 3 குழுவினருக்கும் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு குழுவினருக்கும் வேறுவேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. பிகேவியர் தெரபி முறையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பய ட்டிய சம்பவங்கள் மீண்டும் அச்சுறுத்தவில்லை.

`போபியா’வை போக்கும் சிகிச்சை முறையில் இந்த கண்டுபிடிப்பு மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

Comments (0) | 14-Jan-10 10:24:34 AM
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

Comments (0) | 03-Jan-10 9:37:03 PM
தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள்.

இந்த ஹார்மோன்களின் பணி என்ன?

இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை உருவாக்குவதாகட்டும், வளர்சிதை மாற்றமாக இருக்கட்டும், இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரு ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது மிக மிக மிக அவசியம். இது அதிகமானாலும், குறைவானாலும் உடல் பலவிதக் கோளாறுகளுக்கு ஆளாகிவிடுகிறது.

தைராய்டு உடலின் பல பணிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், இந்தத் தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? நம் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டும் Thyroid Stimulating Hormone (TSH) என்ற திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவம் தைராய்டு சுரப்பிக்கு மட்டுமேயானது. இது தைராய்டு திரவம் உருவாவதிலும் சுரப்பதிலும் நேரடிப் பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோனின் அளவு எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவை என்பன போன்றவற்றையெல்லாம் இந்தத் திரவம் கண்காணிக்கிறது.

தைராய்டு சரியான அளவில் இருப்பதற்கு அயோடின் மிகவும் அவசியம். ஏனெனில், தைராய்டு ஹார்மோன்கள் அயோடினை அடிப்படையாகக் கொண்டவை. உடலில் அயோடின் குறையுமானால், தைராய்டு சுரப்பி ஏறுக்குமாறாகப் பணிசெய்யத் தொடங்கிவிடும். எனவே உணவில் அயோடின் தேவையான அளவு இருக்கவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள நீர் மற்றும் நிலத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒருவேளை அப்பகுதியில் அயோடினின் அளவு குறையுமானால் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தைராய்டுக் கோளாறுகளின் வகைகள்:

தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமையால் ஏற்படும் கோளாறுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

ஒன்று : முன் கழுத்துக்கழலை எனப்படும் காய்டர்(Goiter). கழுத்துப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பெரிதாகி (வீங்கி) பைகள் போல் தொங்கும். தைராய்டு சுரப்பி இரண்டு முதல் பத்து மடங்கு வரை பெரிதாகக் கூடும். கழுத்துப்பகுதியில் சிறிய அளவு வீக்கம் ஏற்பட்டால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரிவரக் கவனிக்காவிடில், இது புற்றுநோய்க்கும் வழி கோலிவிடக்கூடும்.

இரண்டு: தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை. இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படலாம். மிகவும் குறைந்த தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hypothyroidism) அல்லது மிகவும் அதிகமான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hyperthyroidism)
இரண்டுமே உடலின் வளர்சிதை மாற்றத்தில் பல விதமான குளறுபடிகளை ஏற்படுத்தக் கூடியவை.இவ்வகைக்கோளாறுகளை மிக எளிமையான இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து விடமுடியும். சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் பழைய இயல்பான நிலைமைக்கு வெகு விரைவில் கொண்டுவரவும் முடியும்.

தைராய்டுக்குறைவு நோய் (Hypothyroidism)

தைராய்டுக் கோளாறுகளில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுவது இந்த Hypothyroidism என்ற கோளாறால்தான். அதிகச் சுரப்பால் பாதிக்கப் படுபவர்களை விட குறைவான சுரப்பால் பாதிக்கப் படுபவர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாவார்கள். தைராய்டு சுரப்பி T3 மற்றும் T4 எனும் இரண்டு வகை திரவங்களைச் சுரக்கிறது என்று முன்பே கண்டோம். தைராய்டு சுரப்பி இத்திரவங்களைத் தேவைக்கு மிகக் குறைவாகச் சுரக்கும்பொழுது பல விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை மருத்துவர்களையே குழப்பிவிடக்கூடியவை. தைராய்டுக்கான பரிசோதனை செய்யாதவரை, இவை வேறு பல நோய்களுக்கான அறிகுறிகளாகக் கருதப் பட்டு மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால் தைராய்டுக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா என ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுவது நன்மை பயக்கும்.

அடிக்கடி மயக்கம் அல்லது தளர்ச்சி உண்டாகுதல், கைகால்களில் தசைப்பிடிப்பு, விரல்கள் நடுங்குதல், நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் தடுமாறுதல், தசைகள் வீக்கமடைதல், திடீரென அதிக அளவு எடை கூடுதல், தோல் வறண்டு விடுதல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லை, முகம் உப்புதல், மனச்சோர்வு, தொண்டை அடைப்பு,இதயத்துடிப்பு இயல்பை விடக் குறைதல், முடி கொத்துக்கொத்தாக உதிர்தல், தொண்டை வீக்கம், மலட்டுத்தன்மை அல்லது கருச்சிதைவுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் முதலியன தைராய்டு குறைவினால் தோன்றும் சில உடல் உபாதைகள்.

தைராய்டு அதிகம் சுரத்தல் (Hyperthyroidism)

தைராய்டு சுரப்பி அதிக அளவு தூண்டப்படும்பொழுது தேவைக்கு மிக அதிகமான ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன. இது Hyperthyroidism என்று அழைக்கப் படுகிறது. இதற்கான அறிகுறிகள் உடல் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி, சிறிதளவு கூட வெப்பத்தைத் தாங்க இயலாமை, உடல் எரிச்சல், எப்பொழுது பார்த்தாலும் பசித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுதல், தூக்கமின்மை, மூச்சு விட இயலாமை, எடை கன்னாபின்னாவென்று குறைதல், பலவீனம், ஈரமான சருமம், அதிக அளவு இதயத்துடிப்பு ஆகியவை.

தைராய்டுக்கோளாறுகள் பொதுவாக யாருக்கெல்லாம் வரக்கூடும்?

யார் வேண்டுமானாலும் தைராய்டுக்கோளாறினால் பாதிக்கப் படக்கூடும் என்றாலும் கீழ்க்கண்ட பிரிவினர் அதிக எச்சரிக்கையாக இருப்பதும் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

1. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
2. சமீபத்தில் பிரசவித்தவர்கள்
3. அதிகமான கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள்
4. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கும் இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடை இழப்பு ஏற்பட்டவர்கள்.
5. அடிக்கடி உடல் தளர்ச்சி ஏற்படுபவர்கள்
6. குழந்தையின்மை மற்றும் மாதவிடாய்க்கோளாறுகளுக்கு ஆளாகியுள்ள பெண்கள்
7. ஏற்கனவே தைராய்டுக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

இத்தைராய்டுக்கோளாறுகள் ஏன் உருவாகின்றன? இவற்றை எதிர் கொள்வது எப்படி? இவற்றுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன என்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில்........

Comments (0) | 02-Jan-10 4:48:13 PM